நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தகவல்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
தர்மபுரி,
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் பேரனும், ஜி.கே.எம்.தமிழ்குமரன்–சத்யா தம்பதிகளின் மகனுமான கோவியான்குமரன் காதணி விழா பென்னாகரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்த விழாவில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை நீரேற்றம் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி உள்ளோம். விரைவில் 10 லட்சம் கையெழுத்துக்கள் கொண்ட கோரிக்கை மனுவை தமிழக முதல்–அமைச்சரிடம் நேரில் வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.400 கோடிதான் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.2000 கோடி ஆகும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க.தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்று இந்த திட்டத்தையும் நிறைவேற்ற பா.ம.க. தொடர்ந்து போராடும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, நெக்குந்தியில் ராணுவ தளவாட தொழிற்சாலை, மொரப்பூர்–தர்மபுரி ரெயில்பாதை இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற அந்தந்த துறைகளை சேர்ந்த மந்திரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. அண்மையில் கோவையில் நடந்த பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் நல்லாட்சி அமைய கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.