இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் அன்னா பிரவுன்ஸ்டட். மனிதர்களின் குணத்தை அறிந்துகொள்வதற்காக, அந்நாட்டின் மதிப்பில் 1 லட்சம் (பென்னி) நாணயங்களை நீரூற்றுத் தொட்டிக்குள் போட்டார். அந்த நாணயங்கள் அப்படியே இருக்குமா? வேறு யாராவது எடுப்பார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு வார காலம் காத்திருந்தார். ஆனால் அவர் நாணயங்களைப் போட்டு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாலான நாணயங்கள் திருடு போய்விட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 94 ஆயிரம் ரூபாய். தற்போது 154 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களே எஞ்சியிருக்கின்றன.
‘இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் மனம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்தச் சமூகப் பரிசோதனையை மேற்கொண்டேன். 354 கிலோ செப்பு நாணயங்களைப் பலரும் வந்து செல்லும் கேம்ப்ரிட்ஜ் நீரூற்றுத் தொட்டிக்குள் போட்டிருப்பதை பற்றியும், கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருப்பது குறித்தும் தெரிவித்திருந்தோம். அப்படி இருந்தும் 99 சதவீத நாணயங்கள் திருடு போய்விட்டன என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அதுவும் ஒரே நாளில் மாயமாகியிருப்பதை நினைத்தால் கவலையாகவும் இருக்கிறது. இப்படி எடுக்கப்பட்ட நாணயங்களை ஏழை களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கே பயன்படுத்திக்கொண்டது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் கோபமூட்டும் செயலாக இதைப் பார்க்கவில்லை. தமக்குச் சொந்தமில்லாததை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை இன்னும் மக்கள் பெறவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் அன்னா.