ரூ.1 கோடி நகை கொள்ளையில் 14 பேர் கைது, தாய், மகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
கோவை அருகே ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் ஆந்திர சிறையில் இருக்கும் தாய்- மகனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கோவை,
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் இருந்து கோவைக்கு கடந்த 7-ந் தேதி காரில் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வழிமறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரெனூப் (வயது 34), கண்ணன் (38), எர்ணாகுளத்தை சேர்ந்த ஹபீப் (41), பத்தினம்திட்டாவை சேர்ந்த விபின் சங்கீத் (28) இடுக்கியை சேர்ந்த ரின்ஷாத் சித்திக் (24) உள்பட 14 பேரை கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 2 கிலோ 488 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளும், 243 கிராம் வெள்ளி நகைகளும் மீட்கப்பட்டன.
மீதமுள்ள நகைகளை கொள்ளை கும்பல் தலைவன் பைரோஸ் அவரது அண்ணன் அகமது சலீம், தாயார் ஷமா ஆகியோரிடம் கொடுத்திருந்தார். அவர்கள் நகைகளுடன் திருப்பதியில் சுற்றித்திரிந்தபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஆந்திர சிறையில் இருக்கும் சலீம், அவருடைய தாய் ஷமா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆந்திர சிறையில் இருக்கும் தாய்-மகனை இந்த கொள்ளை வழக்கில் கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளோம். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மீதி நகைகள் பறிமுதல் செய்யப்படும்’ என்றார்.