தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவர் கைது
தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
பூந்தமல்லி,
மதுரவாயல் அஷ்டலட்சுமி நகர், 26-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன்(வயது 39). இவர் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வியாபாரத்துக்காக தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் வாங்க முடிவு செய்து மதுரவாயலை அடுத்த நூம்பல், சூசையா நகரை சேர்ந்த பாலேஸ்வர் சிங் (43) என்பவரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பாலேஸ்வர் சிங், எந்திரம் வாங்கி கொடுக்காமல் தயாளனை ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. தயாளன் தனது பணத்தை திருப்பி கேட்டபோது, அவருக்கு பாலேஸ்வர் சிங் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாளன் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலேஸ்வர் சிங்கை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் வடபழனி, போரூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதேபோல் எந்திரம் வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலேஸ்வர்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.