அரும்பாக்கத்தில் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது

அரும்பாக்கத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-01-23 22:45 GMT
பூந்தமல்லி, 

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் குமரேசன்(வயது 36). ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கடந்த 21-ந்தேதி பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகி விட்டு தனது கூட்டாளிகளுடன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்ற குமரேசன், வழியில் அரும்பாக்கத்தில் தனியார் கல்லூரி எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக இறங்கினார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குமரேசனை ஓட, ஓட விரட்டிச் சென்று கல்லூரி வாசல் அருகே சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், பெருந்துறை முருகன், ஜார்ஜ் மில்லர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பாடி குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த செனாய் நகரைச் சேர்ந்த சகாயம்(33), காது ஸ்ரீதர்(25), சூளைமேட்டை சேர்ந்த கார்த்திக் என்ற டோரி கார்த்திக்(34), கானாகுரு என்ற மினேஷ்குமார்(29) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக ரவுடி குமரேசனை கொலை செய்தது தெரிந்தது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

சென்னை சூளைமேடு, நமச்சிவாயபுரத்தை சேர்ந்த மாவா வெங்கடேசன், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். அவரிடம் குமரேசன் அடிக்கடி சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு குமரேசனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு மாவாவெங்கடேசனின் கூட்டாளியான யுவராஜை, குமரேசன் வளசரவாக்கம் வரவழைத்து கொலை செய்தார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான முன்விரோதம் மேலும் வலுத்தது. குமரேசனை தீர்த்துக்கட்ட மாவாவெங்கடேசன், சகாயத்துக்கு பணம் கொடுத்தார்.
கடந்த ஆண்டு குமரேசனை தீர்த்துக்கட்ட முயன்றபோது வெட்டுக்காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டார். அந்த கும்பலில் தன்னை தீர்த்துக்கட்ட வந்த டாக்டர் ஸ்ரீதர் என்ற ரவுடியை கடந்த ஆண்டு பள்ளிக்கரணையில் வைத்து குமரேசன் கொலை செய்தார். இதனால் குமரேசனை மீண்டும் தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்தனர்.

இந்த நிலையில் யுவராஜ் கொலை வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராக குமரேசன் வருவது சகாயத்துக்கு தெரிந்தது. சம்பவத்தன்று குமரேசனை பின்தொடர்ந்து வந்த சகாயம் மற்றும் அவரது கூட்டாளிகள் அரும்பாக்கத்தில் ஓட்டலுக்கு செல்ல முயன்ற குமரேசனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர். போலீசார் பிடிக்கும்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற 4 பேரும் கீழே விழுந்ததில் கை, கால்களில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்