சிக்கமகளூருவில் காட்டு யானை மிதித்து விவசாயி சாவு வனத்துறை அலுவலகம் முன்பு உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
சிக்கமகளூருவில் காட்டு யானை மிதித்து விவசாயி இறந்தார். அவரது உடலை வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு தாலுகா ஒசபேட்டை அருகே உள்ள அரவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரநாயக்(வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது.
தனது விவசாய தோட்டத்தில் குமாரநாயக், இஞ்சி பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரநாயக் தோட்டத்திற்கு காவல் பணிக்கு சென்றார். மேலும் தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடிசையில் அவர் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியேறி இஞ்சி தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் இஞ்சி பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரநாயக் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது காட்டு யானை குமாரநாயக்கை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரநாயக் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் காட்டு யானை அவரை விடாமல் துரத்தியது. மேலும் தும்பிக்கையால் பிடித்து குமாரநாயக்கை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார். ஆனாலும் அவரை காட்டு யானை வயிற்றில் ஓங்கி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின்னர் அங்கிருந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இந்த நிலையில் காட்டு யானை தாக்கி குமாரநாயக் இறந்தது குறித்து அறிந்ததும் அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் தோட்டத்திற்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சிக்கமகளூரு புறநகர் போலீசாரும், வனத்துறையினரும் குமாரநாயக்கின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்ததும் குமாரநாயக்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லாமல், ஒசபேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் வனத்துறை அலுவலகம் முன்பு குமாரநாயக்கின் உடலை வைத்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் வனத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது காட்டு யானை மிதித்து உயிரிழந்த குமாரநாயக்கின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விடாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை வனத்துறை அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் குமாரநாயக்கின் உடலை எடுத்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.