தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.13 லட்சம் நகைகள்-பணம் திருட்டு வெள்ளி பொருட்களையும் அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.13 லட்சம் நகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update: 2019-01-23 22:45 GMT
ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா டவுன் லட்சுமிபுரா படவானேயில் வசித்து வருபவர் சூர்யநாராயணா. தொழில் அதிபரான இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் சூர்யநாராயணாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் இரவு சூர்யநாராயணா வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களும் திருடு போய் இருந்தது. யாரோ மர்மநபர்கள் பீரோவை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சூர்யநாராயணா, சக்லேஷ்புரா டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தப்படி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதன்பின்னர் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக தடய ஆய்வியல் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூர்யநாராயணா அளித்த புகாரின்பேரில் சக்லேஷ்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்