அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் - 3,338 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3,338 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். முதல் நாளில் மாவட்டத்தில் 12 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தின் 2-வது நாளான நேற்று வட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே காலை 11 மணியளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் செய்தனர்.
இந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, அருமுத்துவள்ளியப்பா, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ரத்தினம், ஜனார்த்தனன், ஜெயக்குமார், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோவிந்தன், கணேஷ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், மருது மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 369 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் விக்கிரவாண்டியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 106 பேரையும், திண்டிவனத்தில் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 210 பேரையும், செஞ்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்சங்கர், ஞானமணியம் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 438 பேரையும், மேல்மலையனூரில் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 179 பேரையும், திருக்கோவிலூரில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 331 பேரையும், சங்கராபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 325 பேரையும், வானூரில் ஒருங்கிணைப்பாளர் ஜோதிவேலு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 213 பேரையும், மரக்காணத்தில் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 220 பேரையும், கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 380 பேரையும், சின்னசேலத்தில் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 209 பேரையும், உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 358 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 338 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்றும் (வியாழக்கிழமை) வட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டமும், நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்றனர்.