வானவில் : ஸ்கோடா சூபர்ப் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம்
சொகுசுக் கார்களில் முன்னிலையில் உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் சூபர்ப் மாடலில் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.23.99 லட்சமாகும்.
ஸ்கோடா கார்களை பயன்படுத்தி அதன் சொகுசை உணர்ந்த வாடிக்கையாளர்களுக்காக இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வந்துள்ளது. கார்ப்பரேட் எடிஷன் கேன்டி வொயிட் மற்றும் மேக்னடிக் பிரவுன் ஆகிய வண்ணங்களில் இது வந்துள்ளது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு சேவை வசதி, உத்தரவாத வசதி மற்றும் சாலையில் உதவும் வசதி உட்பட 4 ஆண்டுக்கு நிர்வகிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்துக்கு நிறைவாக உழைக்கும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார்ப்பரேட் எடிஷன் கார் 180 பி.எஸ். (132 கிலோவாட்) திறனை 320 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியது. இது லிட்டருக்கு 14.64 கி.மீ. தூரம் சோதனை ஓட்டத்தில் ஓடியுள்ளது.
கார்ப்பரேட்களுக்கு ஏற்ப முன்பகுதியில் அகலமான ரேடியேட்டர் கிரில், மிக அழகிய பானெட், அகலமான முகப்பு விளக்கு, துல்லியமாக ஒளியை பாய்ச்சக் கூடிய பனிப் பிரதேசத்திலும் ஊடுருவி அளிக்கும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்புகளாகும். பாதுகாப்பு அம்சங்களிலும் எவ்வித குறையும் இல்லாமல் 8 ஏர் பேக்குகளுடன் இது வந்துள்ளது. இ.எஸ்.சி. ( எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் ) வசதி உள்ளது.
இதில் 20.32 செ.மீ. புளோட்டிங் தொடு திரை, பிராக்ஸிமிடி சென்சார் ஆகியன இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சங்களாகும். ஸ்மார்ட்லிங்க் தொழில்நுட்பம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியன உள்ளது. இதில் மூன்று அடுக்கு தட்பவெப்ப நிலை வசதி உள்ளது.
இதனால் பின்னிருக்கையில் இருப்பவர்களுக்கும் குளிர் காற்று நிச்சயம் வீசும். ஸ்கோடா கார்களுக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு உள்ளது. கார்ப்பரேட் எடிஷனும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.