மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.;
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரிய, ஆசிரியைகள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் பயிற்சி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டன.
இதேபோல் பெரும்பாலான அரசு அலுவலர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கு பணிகள் பாதிக்கப்பட்டன. முக்கியமாக வருவாய்த்துறை சம்பந்தமான சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.
இதனிடையே சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களுடைய உரிமைக்காக போராடி வருகிறோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக அரசு எங்களை அழைத்து பேச வேண்டும்.
அதை தவிர்த்து மிரட்டல் விடுவதால் அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) தாலுகா அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், நாளை (வியாழக்கிழமை) மாவட்ட தலை நகரில் மறியல் போராட்டமும் நடைபெறுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டம் குறித்து கலெக்டர் ரோகிணி கூறும் போது, ‘மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆசிரிய, ஆசிரியைகள் இல்லாத இடங்களில் சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.
மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, ஆத்தூர், காடையாம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், ஏற்காடு ஆகிய 10 இடங்களில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். ஓமலூர் தாலுகாவில் 90 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.