ஆசிரியரை கேலி செய்து ‘டிக் டாக்’வீடியோ வெளியீடு; பிளஸ்-2 மாணவர்கள் 6 பேர் இடை நீக்கம்

திருப்பத்தூர் அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியரை கேலி செய்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட பிளஸ்-2 மாணவர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Update: 2019-01-22 23:27 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோட்டில் அரசு நிதியுதவி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சிலர் “டிக் டாக்” எனப்படும் சமூக வலைதளத்தில் வணிகவியல் ஆசிரியரை ஏளனம் செய்தும், மேஜை நாற்காலிகளை இழுத்தும் தரக்குறைவான முறையில் நடந்து கொண்டு கேலி-கிண்டல் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆசிரியரை நடத்தியது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து பிளஸ்-2 மாணவர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சிவா உத்தரவிட்டார். மேலும், அவர்களை தேர்வு நேரத்தின் போது மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவும் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்