கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஊடுருவிய 9 பேரை மடக்கி பிடித்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி ஊடுருவிய 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.;

Update: 2019-01-22 21:55 GMT
தூத்துக்குடி, 

இந்தியா முழுவதும் கடலோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய கடலோர காவல்படை சார்பில் “ஆபரேசன் விஜில்” என்னும் பெயரில் கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், மீன்வளத்துறை, போலீஸ் துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பாதுகாப்பு படைவீரர்கள், தீவிரவாதிகள் போன்று ஊடுருவ முயற்சி செய்வார்கள். அவர்களை ஊடுருவ விடாமல் தடுத்து கைது செய்ய வேண்டும்.

அதன்படி இந்த நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மீன்பிடி படகுகளை முழுமையாக சோதனை செய்தனர். மீனவர்களின் அடையாள அட்டைகளையும் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள தீவுகளில் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே கப்பல் நிற்கும் பகுதியில் ஒரு விசைப்படகில் சோதனை செய்தனர். அந்த படகில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வேடம் அணிந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதே போன்று மீன்பிடி துறைமுகம் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை தென்பாகம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதே போன்று கடலோர கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு மக்களிடம் அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று(புதன்கிழமை) மாலை 6 மணி வரை ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 

மேலும் செய்திகள்