உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
உலகம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல்லை அடுத்த அகரம் பேரூராட்சி உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக 700-க்கும் மேற்பட்ட காளைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 500-க் கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக் கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இறுதியில் 520 காளைகளும், 382 வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமை தாங்கி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் ஊர் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.
இதையடுத்து திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க இளைஞர்கள் மல்லுக்கட்டினர். இருப்பினும் இளைஞர்களின் பிடியில் சிக்காமல் சில காளைகள் சீறிப்பாய்ந்தன. சில காளைகளை பார்த்து காளையர்களே சிதறி ஓடினர்.
களத்தில் நின்று விளையாடிய காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டதால் விறுவிறுப்பு ஏற்பட்டது. மேலும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகளும் வாரி இரைக்கப்பட்டன. ஒரு சில காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன் வீரர்கள் பாதுகாப்பு வேலியில் ஏறி கொண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
அவர்கள் விசில் அடித்தும், கைத்தட்டியும் இளைஞர் களை உற்சாகப்படுத்தினர். இதனால் வீரர்கள் சளைக் காமல் காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளி காசுகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் பெண் ஒருவர், தனது காளையை அவிழ்த்து விட்டு வீரர்களுக்கு சவால் விட்டார். ஆனால் அது வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடியது. இதையடுத்து அவருக்கு மின்விசிறி பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவிழ்த்து விடப்பட்ட 2 காளைகள் களத்திலேயே மோதிக்கொண்டது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு, தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மதுரை சிந்தாமணியை சேர்ந்த முத்து (வயது 25), திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த கார்த்தி (28) உள்பட 7 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜஸ்டின், பிரபாகரன், வீரபாண்டி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஜல்லிக் கட்டை பார்வையிட்டார்.