கொடைக்கானல் வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் தீயால் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் பகலில் வெப்பமும், மாலையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. குறிப்பாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் செடி, கொடிகள் கருகுகின்றன. மேலும் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்படுகிறது.
கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. தேன்பண்ணை, டால்பின்நோஸ், ‘சிட்டிவியூ’, செண்பகனூர் மற்றும் குறிஞ்சிநகர் போன்ற வனப்பகுதிகளில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயை அணைக்க முடியாததால் நேற்று 2-வது நாளாகவும் தீ பற்றி எரிகிறது.
குறிப்பாக ‘சிட்டிவியூ’ பகுதியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடி, மரங்கள் எரிந்து வருவதால் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த புகைமண்டலம் நகர் முழுவதும் சூழ்ந்து பொதுமக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதுதவிர தீயில் எரியும் கழிவுகள் காற்றில் பறந்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் தீ பிடித்து எரிவதால் அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக தீத்தடுப்பு குழுவினரை நியமித்து தீயை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.