பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-22 23:00 GMT
புதுக்கோட்டை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல முக்கணாமலைப் பட்டியில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.

ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தொடர்பாளர் சரவணன் தலைமை தாங்கி தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், ரெங்கசாமி, கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அய்யப்பனும், மணமேல்குடியில் வட்டார செயலாளர் விஸ்வநாதனும், ஆவுடையார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் அறிவழகனும் தலைமை தாங்கினர். இலுப்பூரில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமையிலும், கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் தனராஜ் தலைமையிலும் நடந் தது.

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மணிகண்டனும், திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜயாவும், பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தலைமையிலும், அரிமளம் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பழனியப்பன் தலைமையி லும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கீரனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் அறந்தாங்கி மற்றும் விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்