தவளக்குப்பம் முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபருக்கு வலைவீச்சு

தவளக்குப்பம் முருகன் கோவிலில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-01-22 00:09 GMT

பாகூர்,

தவளக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டில் பிரசித்திபெற்ற சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. தைப்பூச விழாவை கொண்டாடும் வகையில் இந்த முருகன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலில் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர்கள், மற்றும் நிர்வாகிகள் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவில் ஒரு மர்ம நபர் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் 2 முறை உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை போலீசார் துப்பு துலக்கவில்லை. தற்போது இந்த கோவிலில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்