டி.என்.டி. சான்றிதழ் டி.என்.சி.யாக மாற்றப்பட்ட விவகாரம்: உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

டி.என்.டி. சான்றிதழை டி.என்.சி.யாக மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-01-21 22:45 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் டி.என்.டி. சான்றிதழை டி.என்.சி.யாக மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசு வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் அதுல்யாமிஸ்ரா, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இயக்குனர் சம்பத், பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனர் மதிவாணன், வருவாய் நிர்வாக இணை ஆணையர் லட்சுமி ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் பாப்பாபட்டி அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவ–மாணவிகள் விடுதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கிராம மக்கள், டி.என்.டி.யாக இருந்த சான்றிதழை டி.என்.சி.யாக அரசு மாற்றியுள்ளது. அதை மீண்டும் டி.என்.டி. சான்றிதழாக வழங்க வேண்டும். இங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளாக வைத்தனர். இந்த ஆய்வு பணிகளை முடித்த அதிகாரிகள், அங்குள்ள பள்ளி மற்றும் விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் அரையாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து சேடபட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த 16 பேரின் நினைவு தூணை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள் குப்பணம்பட்டி முதல் பெருங்காமநல்லூர் ஆற்றுக்கால்வாயில் 6–ம் கால்வாயை சுத்தம் செய்து சீரமைத்து இப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். 16 பேர் உயிர்நீத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

பின்னர் இதேபோல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகிற பிப்ரவரி மாத இறுதிற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் குணாளன், உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் ராஜன், செல்லம்பட்டி ஒன்றிய ஆணையாளர் அசோக்குமார், பேரையூர் தாசில்தார் இளமுருகன், சேடபட்டி ஒன்றிய ஆணையாளர் ஆசிக் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்