சிங்கம்புணரி அருகே குறுகலான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட ஆபத்தாரணப்பட்டி கிராமத்தில் உள்ள குறுகிய பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-01-21 22:15 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்டது ஆபத்தாரணப்பட்டி ஊராட்சி. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். அரளிக்கோட்டை–ஏரியூர் சாலை இடையே அமைந்துள்ள ஆபத்தாரணப்பட்டி கிராமத்தில் மணிமுத்தாறு கால்வாய் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இதன் வழியாக தான் கிராமத்திற்கு செல்ல முடியும்.

இந்த கிராமத்தின் அருகில் உள்ள ஏரியூர், எஸ்.மாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு செல்வது மிக எளிதானது. இந்தநிலையில் பாலம் தற்போது பழுதடைந்து மிகவும் குறுகலாக உள்ளதால் போக்குவரத்திற்கு பெரும் சிரமமேற்படுகிறது.

பல்வேறு சமயங்களில் எந்த ஒரு வாகனமும், பாலத்தின் சிரமம் கருதி கிராமத்திற்கு வருவதே இல்லை. இதனால் மாணவ–மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏரியூர் மெயின் சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குறுகலான இந்த பாலம் குறித்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:– சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மணிமுத்தாறு கால்வாய் பாலம் தற்போது வழுவிழந்த நிலையில் குறுகிய பாலமாக உள்ளது. மேலும் சாலை வளைவில் இந்த குறுகிய பாலம் அமைந்துள்ளதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அரசு பஸ், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் வரமறுக்கின்றன. அவ்வாறு வந்தாலும் பாலத்தின் முன்பே நிறுத்தி விடுகின்றனர். மழைக் காலங்களின் போது மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் வந்தால் பாலத்தை தொட்டு செல்லும் அளவிற்கு தண்ணீர் செல்லும்.

அப்போது பாலம் அபாயகரமாக காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். எனவே இந்த குறுகிய பாலத்தை அகலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும். மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்