திண்டுக்கல்லில் சோகம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் போடி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மனைவி தாயாரம்மாள் (வயது 75). இவர்களுக்கு வெற்றிச்செல்வன் (26), அன்பரசன் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் அன்பரசன் தனது மனைவி குழந்தைகளுடன் திருச்சியில் வசிக்கிறார். வெற்றிச்செல்வன் தனது மனைவி குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு எதிரிலேயே வசிக்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் தாயாரம்மாள் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென வீட்டு சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அப்போது ஓடுகளால் ஆன மேற்கூரையும் விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தாயாரம்மாள் படுகாயமடைந்தார். இதற்கிடையே சுவர் இடிந்து விழுந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெற்றிச்செல்வன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த மூதாட்டியை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் சுவர் எவ்வாறு இடிந்து விழுந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.