புதுச்சேரி – கன்னியாகுமரி ரெயிலை தினமும் இயக்கவேண்டும் மத்திய மந்திரிக்கு கோரிக்கை

புதுச்சேரி – கன்னியாகுமரி ரெயிலை தினந்தோறும் இயக்கவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-20 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே கடந்த 5 வருடங்களாக வாரத்தில் ஒருநாள் (வியாழக்கிழமை) எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விருத்தாசலம், திருச்சி, மதுரை (கார்டு லைன்) இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு முடிவடைந்துள்ளதால் அந்த ரெயிலை தினந்தோறும் அல்லது வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும்.

தற்போது இந்த ரெயில் புதுவையில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்படுகிறது. இது மக்களுக்கு ஏற்றதாக இல்லை. இந்த ரெயிலை கார்டு லைன் வழியாக இயக்கினால் புதுவையில் இருந்து மாலை நேரத்தில் புறப்படும் விதமாக செய்யவேண்டும்.

இரட்டை ரெயில் பாதை வசதியுள்ளதால் புதுவையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், கோவை, செங்கோட்டை மற்றும் பிற பகுதிகளுக்கும் ரெயில்களை இயக்கவேண்டும். புதுவையிலிருந்து செங்கோட்டை அல்லது கொல்லத்துக்கு நேரடி ரெயில் இயக்கவேண்டும்.

காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயிலை ஏனாம் செல்லும் புதுவை மக்களின் வசதிக்காக புதுச்சேரி வரை நீட்டிக்கவேண்டும். விழுப்புரம் – மதுரை இடையே இயக்கப்படும் ரெயிலை தென்மாவட்ட மக்களின் வசதிக்காக புதுவை வரை நீட்டிக்கவேண்டும்.

புதுவையிலிருந்து திருச்சி, சேலம் வழியாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், திருப்பதிக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கவேண்டும். புதுவையிலிருந்து சென்னைக்கும் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவேண்டும். புதுவையிலிருந்து யஷ்வந்த்பூர் செல்லும் வாரந்திர ரெயிலை மைசூர் வழியாக கோவா வரை நீட்டிக்கவேண்டும்.

மீட்டர் கேஜ் ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும்போது பள்ளிநேலியநல்லூர் ரெயில் நிலையம் மூடப்பட்டது. அதை மீண்டும் திறக்கவேண்டும். புதுவை – விழுப்புரம் இடையே காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கவேண்டும். புதுவை ரெயில் நிலையத்தை ஏ பிரிவு அந்தஸ்துக்கு உயர்த்தவேண்டும். புதுவை – கடலூர் இடையே புதிய ரெயில்பாதை அமைக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்