ஆசிரியர்– மாணவர் உறவு புனிதமானது சுகிசிவம் பேச்சு

ஆசிரியர்–மாணவர் உறவு புனிதமானது என்று சிவகங்கையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சுகிசிவம் பேசினார்.

Update: 2019-01-20 21:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை சாம்பவிகா பள்ளி 19–வது ஆண்டு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி செயலர் சேகர் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் நாகராணி, முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தனர். இதில் 10 மற்றும் பிளஸ்–2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கி கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:– சிவகங்கை ஒரு புண்ணியபூமி. இது பல சிறப்புக்களை கொண்டது.

மனித வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்யத்தான் நாம் உள்ளோம் மாணவர்கள் படிக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனத்துடன் கேட்டுக்கொண்டால் முழுவதும் மனதில் பதியும். படிப்பில் போட்டி இருக்க வேண்டும். பொறாமை இருக்கக்கூடாது. மாணவர்கள் திறமைகளை நன்றாக வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பேச்சாளர் சுகிசிவம் பேசியதாவது:– மாணவர்கள் விளையாட்டு, யோகாவில் ஈடுபட வேண்டும். ஒரு நாட்டின் மன்னரை விட பெருமைப்படக்கூடியவர்கள் ஆசிரியர்கள். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா மஸ்கட் நாட்டிற்கு சென்ற போது, அந்த நாட்டு மன்னர், அவருக்கு கார் ஓட்டி சேவை செய்தார்.

இதை பார்த்து பலர் மன்னரை விமர்சித்தனர். அப்போது குறுக்கிட்ட மன்னர், அவர் முதலில் என் ஆசிரியர், அந்த முறையில் தான், நான் அவருக்கு சேவை செய்தேன் என்றுள்ளார். ஆசிரியர்–மாணவரின் உறவு மிக புனிதமானது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ் சங்க செயலாளர் மாரியப்பமுரளி, மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மோகனசுந்தரம், தேவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், நல்லாசிரியர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பாலசந்தர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்