ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட இறைச்சி வணிக வளாகம் தஞ்சையில் மதுபான கூடமாக செயல்படும் அவலம்

தஞ்சையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட இறைச்சி வணிக வளாகமானது மதுபான கூடமாக செயல்பட்டு வருகிறது.

Update: 2019-01-19 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பூக்கார தெருவில் மீன்மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்ட இந்த மீன்மார்க்கெட்டில் 6 அடி நீளம், 6 அடி அகலத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. கட்டிடம் பழுதடைந்ததால் கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்ய மீன்வியாபாரிகள் மிகவும் அச்சப்பட்டனர். பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்கு வர தயக்கம் காட்டினர்.

இதனால் பழுதடைந்த கட்டிடத்தை விட்டு வியாபாரிகள் வெளியேறினார்கள். கட்டிடத்தை முழுமையாக இடித்து தரைமட்டமாக்கிவிட்டு மீன்கள், ஆட்டுக்கறி, கருவாடு போன்ற வியாபாரம் நடக்கும் வகையில் இறைச்சி வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி பழுதடைந்த கட்டிடம் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் இறைச்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆழ்குழாய் கிணறு, கழிப்பறை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 5 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் வணிக வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் திறந்தவெளி மதுபான கூடமாக செயல்பட்டு வருகிறது.

பூச்சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் சிலர், தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் கப் போன்றவற்றையும் வாங்கி கொண்டு வணிக வளாகத்திற்கு வந்துவிடுகின்றனர். அங்கே அமர்ந்து மது குடித்துவிட்டு, காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் கப்புகளை அங்கே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தால் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வணிக வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து தமிழ்த்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

தஞ்சை கீழவாசலில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு செல்வதற்கு அதிக தூரம் என்பதால் பர்மாகாலனி, அண்ணாநகர், பூக்காரத்தெருவை சேர்ந்த மக்கள், மீன்வாங்குவதற்கு வசதியாக தனியார் ஒருவர், மீன்மார்க்கெட் நடத்துவதற்கு இடத்தை வழங்கினார். அந்த இடத்தில் செயல்பட்ட மீன்மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகம் கட்டியது.

ஆனால் இந்த கட்டிடத்திற்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திறக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இப்போது முட்புதர்கள் வளர்ந்து, சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. இங்கு 17 கடைகள் உள்ளன. இவற்றை திறக்காததால் தெருக்களில் ஆங்காங்கே மீன் விற்பனை கடை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளின் முன்பு கும்பல், கும்பலாக நாய்களும் கூடியுள்ளன.

இதனால் அந்த வழியாக மக்கள் சென்று வருவதற்கே அச்சமாக உள்ளது. வணிக வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஒரு கடைக்கு இவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து மாநகராட்சி நிர்வாகம் வசூல் செய்து கொள்ளலாம். இதன்காரணமாக ஒரு நிரந்தர வருமானம் கிடைக்கும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் பல கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை பற்றி சிறிது கூட கவலைப்படாமல் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதை திறக்கவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்