திருமுல்லைவாயலில் கழுத்தை நெரித்து விதவை கொலை வேலூர் போலீசில் உறவினர் சரண்

திருமுல்லைவாயலில், வீட்டில் தனியாக இருந்த விதவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வேலூர் போலீசில் அவரது உறவினர் சரண் அடைந்தார்.

Update: 2019-01-19 22:00 GMT
ஆவடி,

திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் திலகா (வயது 32). மின் வாரியத்தில் பணியாற்றி வந்த இவருடைய கணவர் தீபன், 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விதவையான திலகா, தனது மகள் பிரின்சி(12) உடன் வசித்து வந்தார். பிரின்சி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

திலகா, வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு சத்துணவு கூடத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்காக பிரின்சி, திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டாள். திலகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் திலகா வீட்டுக்கு அவரது தூரத்து உறவினரான கனகம்மாசத்திரத்தை சேர்ந்த குமார்(42) என்பவர் வந்துசென்றார். நேற்று காலை 10 மணி வரை திலகா வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளரான மல்லிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

வீட்டின் உள்ளே தரையில் திலகா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், விசாரணை நடத்தினர். அதில் திலகா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், திலகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் திலகாவின் உறவினரான குமார், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் சரண் அடைந்தார். விசாரணையில், திலகாவின் கணவர் தீபன் உயிருடன் இருக்கும்போதே குமாருக்கும், திலகாவுக்கும் 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த விவகாரம் அறிந்த குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த குமாரிடம், ‘இனிகுடும்ப செலவுக்கு நீதான் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் வீட்டுக்கே வந்துவிடுவேன்’ என்று கூறினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட குமார், திலகாவுக்கு 2 தூக்க மாத்திரைகள் கொடுத்து, அவர் மயங்கியதும் ரிப்பனால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வேலூர் தப்பிச்சென்றார்.

அதற்குள் போலீசார் தேடுவதை அறிந்த குமார், வேலூர் போலீசில் சரண் அடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சரண் அடைந்த குமாரை சென்னைக்கு அழைத்துவர மதுரவாயல் போலீசார் வேலூர் விரைந்தனர்.

மேலும் செய்திகள்