ராமநகர் அருகே ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் தலைவர்கள் ஆலோசனை மேலும் 2 நாட்கள் தங்கியிருக்க முடிவு

ராமநகர் அருகே ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மேலும் 2 நாட்கள் ஓட்டல்களில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-01-19 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது ரமேஷ் ஜார்கிகோளி, சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கரிடம் இருந்து மந்திரி பதவிகள் பறிக்கப்பட்டன. அதே நேரத்தில் மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கினார்கள். இதையடுத்து, ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் எந்த எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை. என்றாலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாலும், அவர்கள் எந்த நேரமும் காங்கிரசை விட்டு விலகலாம் என்ற தகவல்களும் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்..ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் இறங்கினார்கள்.

பின்னர் நேற்று முன்தினம் பெங்களூருவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேர் மட்டுமே பங்கேற்கவில்லை. 76 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்குள்ள ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலில் 48 எம்.எல்.ஏ.க்களும், அதே பிடதியில் உள்ள மற்றொரு ரெசார்ட் ஓட்டலில் 13 எம்.எல்.ஏ.க்களும் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டனர். ஈகிள்டன் ஓட்டலில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் 13 எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், சித்தராமையா, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டலில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில், நேற்று காலையில் மற்றொரு ரெசார்ட் ஓட்டலில் தங்கி இருந்த 13 எம்.எல்.ஏ.க்களும் ஈகிள்டன் ஓட்டலுக்கு வந்தனர். பின்னர் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் மந்திரி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினார்கள். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கும், டி.கே.சுரேசுக்கும் வழங்கப்பட்டு இருந்்ததால், அவர்கள் நேற்று காலையிலேயே ஓட்டலுக்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, நேற்று மதியம் ஈகிள்டன் ஓட்டலுக்கு சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தலைவர்கள் சென்றனர். பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுடன் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும், பா.ஜனதாவுக்கு செல்லும் திட்டத்தை கைவிடும் படியும் தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.

அதே நேரத்தில் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்திருந்தாலும், கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினாலும் எம்.எல்.ஏ.க்கள் மேலும் 2 நாட்கள் ஓட்டலிலேயே தங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாட்களுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த தொகுதிக்கு செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஏனெனில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் இன்னும் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் எம்.எல்.ஏ.க்களான ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பட்டீல், ஸ்ரீமந்த் பட்டீல், பீமா நாயக், கணேஷ் உள்ளிட்ட 8 பேர் பா.ஜனதாவுக்கு செல்லலாம் என்பதால், இன்னும் 2 நாட்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் தங்க வைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானத்திருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டல்களில் தங்கி இருப்பது கர்நாடக அரசியலில் தொடர்ந்து பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் அரசு பணி வழக்கம் போல நடந்து வருகிறது. மந்திரிகள் தங்களது வேலையை செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்,’ என்றார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை நாட்கள் ஓட்டலில் தங்கி இருப்பார்கள் என்பது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அரசுக்கு ரூ.992 கோடி அபராதம் செலுத்தாமல் நிலுவை
ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். அந்த ஓட்டல் அரசு நிலம் 87 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த ரெசார்ட் ஓட்டலுக்கு அரசு சார்பில் ரூ.992 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அபராத தொகையை அந்த ஓட்டல் நிர்வாகம் இதுவரை செலுத்தவில்லை.

இந்த நிலையில், ஈகிள்டன் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் தங்கியுள்ளதால், அரசுக்கு வர வேண்டிய ரூ.992 கோடியை காங்கிரஸ் தலைவர்கள் வசூலித்து விட்டு வர வேண்டும் என்று பா.ஜனதா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

இதுபற்றி மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலுக்கு ரூ.992 கோடி அபராதம் காங்கிரஸ் ஆட்சியில் தான் விதிக்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் அபராதம் விதிக்கப்படவில்லை. அதனால் கூட்டணி ஆட்சியில் ரூ.992 கோடி அபராத தொகையை ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்து வசூலிப்போம்’ என்றார்.

மேலும் செய்திகள்