வரும் காலங்களில் பூமியில் உயிரினங்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேச்சு

வரும் காலங்களில் பூமி உயிரினங்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறினார்.

Update: 2019-01-18 22:30 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் புதுமைக்கான ஆறாவது அலை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஆஸ்டின் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமி நாராயணராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜவஹர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு அக்னி, பிரமோஸ், ஆகாஸ் உள்ளிட்ட ஏவுகனைகளின் செயல்பாடுகள் மற்றும் ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் மாணவ–மாணவிகளுடன் இதுதொடர்பாக கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

இந்தியா விண்வெளித்துறையில் சாதனை படைத்து வரும் நான்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி உள்ளன. மற்ற நாடுகளை போன்று இந்தியா வருகிற 2022–ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பினால் மீண்டும் பூமிக்கு திரும்புவது கடினமானது. அதனை கருத்தில் கொண்டு முதற்கட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலவில் அபூர்வமான உலோகங்கள் கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க உலோகம் ரினோலித். இதில் இருந்து 3 வகையாக ஹீலியம் உருவாக்க முடியும். இது மிகப்பெரிய பொக்கி‌ஷம் போன்றது. இந்தியா உள்பட 9 நாடுகள் இணைந்து இந்த ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. செவ்வாய் கிரகம் முன்னர் பூமி போன்று தண்ணீருடன் செழிப்பாக இருந்தது. பின்னர் வறண்டு போனது. பூமியும் செவ்வாய் கிரகம் போன்ற வறண்டு போகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் பூமியில் உயிரினங்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டால் மனிதர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற ஆராய்ச்சியின் போது மற்றொரு பூமி போன்ற கிரகம் இருப்பது கண்டற்யப்பட்டுள்ளது. அது நீல நிறத்தில் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கிரகம் என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்