தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2019-01-18 22:15 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

விழிப்புணர்வு மன்றம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

பரிசுகள்

ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து, வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்திட வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் மூலம், வாக்காளர் சேர்ப்பது, வாக்களிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஊக்குவித்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அலுவலகத்தில் உள்ள வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்டு வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள வாக்களித்தலின் நிலையை விளக்குதல், தேர்தல் நடைமுறையை விளக்குதல், தேர்தல் நடைமுறையில் பயன்படுத்தப்படும் படிவங்களின் வகைகள் மற்றும் அதனுடைய தகவல்கள், தேர்தல் குறித்த எளிமையான காட்சிப் படங்களை பற்றியது, வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் பற்றியது என 5 வகையான விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும். மேலும், தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) சங்கரநாராயணன், தேர்தல் தனி தாசில்தார் நாகராஜன் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்