சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Update: 2019-01-18 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி, ஆசனூர், தலமலை, டி.என்.பாளையம், கேர்மாளம் என 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

மொத்தம் 45 குழுக்கள் காட்டுக்குள் சென்று கணக்கெடுக்கிறார்கள். வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் என 5 முதல் 6 பேர் வரை ஒவ்வொரு குழுவிலும் உள்ளார்கள்.

வருகிற 23–ந் தேதி வரை அதாவது 6 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் முதல் 3 நாட்கள் பகுதி பகுதியாகவும், அடுத்த 3 நாட்கள் பாதை வாரியாகவும் கணக்கெடுக்கப்படுகிறது.

மரங்களில் காணப்படும் விலங்குகளின் நகக்கீறல், கால் தடம், எச்சம் போன்றவற்றை வைத்தும், நேரடியாக கண்டும் கணக்கெடுக்கிறார்கள். இதற்காக அதிநவீன கேமராக்கள், ஜி.பி.எஸ்., ஜூபைடர் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

6 நாட்கள் கணக்கெடுப்பு பணி முடிந்து அதை அறிக்கையாக மாநில வன அதிகாரியிடம் கணக்கெடுப்பு குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அவர் வனவிலங்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவார். அதன்பிறகு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? எந்தெந்த விலங்கின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது என்று தெரியவரும்.

மேலும் செய்திகள்