உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டர் சாதனை

எச்.ஏ.எல். நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி பறக்கும் இலக்கை ஏவுகணை வீசி தாக்கி அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்து உள்ளது.

Update: 2019-01-18 00:11 GMT
பெங்களூரு,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின் எச்.ஏ.எல். நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் தேவைக்காக எச்.ஏ.எல். நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தில் இலகுரக போர் ஹெலிகாப்டரை தயாரித்து உள்ளது.

போர் பயன்பாட்டிற்கான இந்த இலகுரக ெஹலிகாப்டர் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வானில் பறந்தபடி பறக்கும் இலக்கை ஏவுகணையை செலுத்தி தாக்கி அழிக்கும் சோதனைக்கு இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூர் சோதனை தளத்தில் இந்த பரிசோதனை சிலதினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் வானில் பறந்தபடியே பறக்கும் இலக்கை நோக்கி ஏவுகணையை செலுத்தி இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர் துல்லியமாக தாக்கி அழித்தது. விங் கமாண்டர் சுபாஷ் பி.ஜான், கர்னல் ரஞ்சித் சிட்டாலே, எச்.ஏ.எல். நிறுவனத்தின் என்ஜினீயர், விமானப்படையின் விமானி ராஜீவ் துபே ஆகியோர் இந்த ஹெலிகாப்டரை இயக்கி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இது போருக்கான ஹெலிகாப்டர் தயாரிப்பில் ஒரு புதிய மைல்கல் என்று எச்.ஏ.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

“நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைத்துவிதமான ஆயுதங்களையும் கையாளும் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 20 எம்.எம். டர்ரெட் துப்பாக்கி, 70 எம்.எம். ராக்கெட்டுகளை வைத்து இலக்கை தாக்கும் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போர் ஹெலிகாப்டர் சியாச்சின் அளவுக்கு உயரமான இடத்திலும் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்க வல்லது. இதில் இலக்கை கண்டறிவதற்கான இன்ப்ராரெட் சைட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வானிலும் நிலத்திலும் இலக்கை தாக்கி அழிக்க வல்லது. இதனை பயன்படுத்தி இலக்கை நோக்கி ெஹலிகாப்டரை திருப்பாமலேயே ஏவுகணையை செலுத்தி இலக்கை அழிக்கலாம். ஆளில்லா விமானம், மிகச்சிறிய விமானம் உள்பட எந்தவகையான வான்வழி தாக்குதலையும் எதிர்த்து அழிக்க முடியும்.

இந்த போர் ஹெலிகாப்டர் குறைந்த அளவு உயரத்திலும் பறக்கக்கூடியது. ராணுவ கொள்முதல் கவுன்சில் முதல்கட்டமாக இதுபோன்ற 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை நமது ராணுவத்திற்காக வாங்க ஒப்புதல் அளித்து உள்ளது.

எச்.ஏ.எல். நிறுவனம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்