மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் : பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
மும்பையில் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் உருவான தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மும்பை,
இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
19-ம் நூற்றாண்டின் பாரம்பரிய மாளிகையான குல்சன் மஹால் வளாகத்தில் இந்த சினிமா அருங்காட்சியகம் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சினிமா அருங்காட்சியத்தில் காந்தி மற்றும் சினிமா, குழந்தைகள் சினிமா, தொழில்நுட்ப படைப்பாற்றல், இந்தியன் சினிமா ஆகிய 4 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்று இருக்கின்றன.
குல்சன் மஹால் மாளிகையும் பகுதியாக அருங்காட்சியமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இங்கு சினிமா வரலாற்றை சொல்லும் வகையில் சினிமாவின் தோற்றம், இந்தியாவுக்கு சினிமா வருகை, இந்திய ஒலி இல்லா படம், ஒலி எழுச்சி, ஸ்டூடியோ சகாப்தம், இரண்டாம் உலகப்போரின் தாக்கம், படைப்பாற்றல், பிராந்திய சினிமா உள்ளிட்ட 9 கேலரிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சினிமா அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.