கோர்ட்டு வளாகத்தில் கைதிக்கு வீட்டு உணவு: உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
கோர்ட்டு வளாகத்தில் கைதிக்கு வீட்டு உணவு சாப்பிட அனுமதித்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மும்பை,
நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மகேஷ் பால்நிகர் என்பவரும் ஒருவர். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் இவரை போலீசார் அலிபாக் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது, கோர்ட்டு வளாகத்தில் மகேஷ் பால்நிகருக்கு அவரது பெண் தோழி ஒருவர் விதிமுறையை மீறி வீட்டில் இருந்து கொண்டு வந்து மதிய உணவு பரிமாறியிருக்கிறார். இதற்கு பாதுகாப்புக்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் அனுமதி வழங்கி இருக்கின்றனர்.
இந்தநிலையில், கைதிக்கு உணவு பரிமாறியதை கோர்ட்டுக்கு வந்திருந்த கொலையான உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வினியின் கணவர் ராஜூ கோரே தனது செல்போனில் படம் பிடித்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு அனில் பரஸ்கரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் விசாரணை கைதி மகேஷ் பால்நிகருக்கு பாதுகாப்புக்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதில் தொடர்புடைய போலீஸ்காரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.