மூஞ்சூர்பட்டு கிராமத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் இளைஞர்கள் காயம் சோழவரத்தில் பாதியில் விழா நிறுத்தம்

மூஞ்சூர்பட்டு கிராமத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் இளைஞர்கள் பலர் காயமடைந்தனர். அரசாணையில் சோழவரம் கிராமத்தின் பெயர் இல்லாததால் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.;

Update: 2019-01-17 22:45 GMT
அடுக்கம்பாறை,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களில் நடத்தப்படுவதை போன்று வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போலீசார், வருவாய்த்துறையினரின் கண்காணிப்பில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் காளை விடும் திருவிழா நடந்தது. இதனையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் சரக்கு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு மூஞ்சூர்பட்டு கிராமத்துக்கு வந்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த காளையின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

காளை விடும் விழாவையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக அந்த கிராமத்தில் உள்ள தெருவின் இரு புறமும் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கம்புகளில் உள்ளேயும், வெளியேயும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்து காளைகள் பாய்ந்து வருவதை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

காலை 11 மணி அளவில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை தெருவின் இருபுறமும் இருந்த இளைஞர்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது சில மாடுகள் திரும்பி இளைஞர்கள் மீது முட்டி மோதியது. காளைகளின் கொம்புகள் பல காளையர்களை பதம் பார்த்தது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை கண்டு எதிரே நின்றிருந்த இளைஞர்கள் தெறித்து ஓடினர்.

விழாவின்போது சில கன்றுக்குட்டிகளும் அவிழ்த்து விடப்பட்டன. கன்றுக்குட்டிதானே என நினைத்து ஒதுங்காமல் அதை கைகளால் தட்ட நினைத்த இளைஞர்களை அவை முட்டி தூக்கி வீசியதை காணமுடிந்தது. இதில் இளைஞர்கள் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆம்புலன்ஸ்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விழாவை காண பல்வேறு கிராம பொதுமக்கள் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் முகாமிட்டனர். வீடுகளின் மாடிகளில் நின்றும் ரசித்தனர்.

இதேபோல பென்னாத்தூரை அடுத்த சோழவரம் கிராமத்திலும் காளை விடும் விழா நடந்தது. ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் வீதியில் ஓட விடப்பட்டன. இளைஞர்கள் கூடி நின்று ஆரவாரம் செய்தனர். கைகளால் காளைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். செல்போனில் புகைப்படம் எடுக்க நின்றிருந்த இளைஞர்களை காளைகள் முட்டியது. கூட்ட நெரிசல், காளைகள் இடித்தது மற்றும் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். பலர் வீடுகளின் மாடிகளில் நின்று செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

10 மாடுகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் இந்த விழாவுக்கு அனுமதி வாங்கவில்லை எனக்கூறி வேலூர் தாலுகா போலீசார் விழாவை தடுத்து நிறுத்தினர். இதனால் விழாவை காண வந்த மக்கள் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விழாக்குழுவினர் கூறுகையில், ‘அரசாணையில் எங்களது கிராமத்தின் பெயர் இடம்பெறாததால் விழாவை போலீசார் நிறுத்தி உள்ளனர். மீண்டும் விழா நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்