வீர விளையாட்டுகள், உணவு திருவிழாவுடன் பெரியார் திடலில் களைகட்டிய திராவிடர் திருநாள்

பெரியார் திடலில், திராவிடர் திருநாள் கோலாகலமாக நடந்தது. வீர விளையாட்டுகள், உணவு திருவிழா என களை கட்டியது.

Update: 2019-01-17 21:45 GMT
சென்னை,

பொங்கல் திருநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விழா நடந்தது. முதல் நாளில் லயோலா கல்லூரி பேராசிரியர் காளஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கம் நடந்தது.

தொடர்ந்து, தந்தை பெரியார் 21 அடி உயர சிலைக்கு முன் மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இளைஞர்களும், மாணவர்களும் சிலம்பம் அடித்தனர். சுருள் கத்தி, வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பெரியார் திடல் களை கட்டியது.

பெரியார் திடலின் வெளி அரங்கில் பல்வேறு ஊர்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. இதனை சென்னைவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி, சாப்பிட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. இயற்கையைக் காப்போம், பேரிடர் தவிர்ப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு ஒளிப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. எருதுகளுக்கான தொழுவம் அமைக்கப்பட்டு, அங்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு பெரியார் விருதுகள் திராவிட இயக்க ஆய்வாளர் நெல்லை திவான், கவிஞர் பழனி, இயக்குனர் குட்டி ரேவதி, ஓவியர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, மீரா.கதிரவன், நெல்லை ஜெயந்தா, கண்ணிமை ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பெரியார் விருதினை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் புரவலர் கி.வீரமணி வழங்கினார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டார். விழா நிறைவு நாளான நேற்று அலங்காநல்லூர் வேலு ஆசான் தலைமையில் சமர் கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் செய்திகள்