ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 7,100 கறவை மாடுகள் வழங்க திட்டம் ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 7 ஆயிரத்து 100 கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.

Update: 2019-01-12 22:30 GMT
தூத்துக்குடி, 

நெல்லை, தூத்துக்குடி ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதல் முறையாக 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் நடந்தது.விழாவுக்கு ஆவின் பொதுமேலாளர் ஸ்ரீரங்கநாததுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கலந்து கொண்டு 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கறவை மாடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் ஒன்றியத்தின் மூலம் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்திலேயே சிறந்த ஆவின் ஒன்றியமாக நெல்லை, தூத்துக்குடி ஆவின் ஒன்றியத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் இரண்டு பால் குளிர்விப்பான் மையங்கள் மூலம் தினமும் 7 ஆயிரத்து 500 லிட்டர் பால் பெறப்படுகிறது. இதனை அதிகரிக்கும் வகையில் தற்போது 50 கறவை மாடுகள் நெடுங்குளம் கிராமத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை என்ற நிலை இருந்தது.

உடனடியாக 10 கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து பால் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கும் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி 7 ஆயிரத்து 100 கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆவின் உதவி பொதுமேலாளர் அருணகிரிநாதர், மேலாளர் தங்கையா, கால்நடை டாக்டர் பாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெடுங்குளத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திலும், சாத்தான்குளத்தில் உள்ள கறவை மாடுகளுக்கான தாது உப்புக்கலவை உற்பத்தி செய்யும் நிலையத்தையும் ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்