பாபநாசம் அருகே விவசாயிகள் சங்க தலைவர் மீது தாக்குதல் - பா.ஜனதா பிரமுகர் கைது
பாபநாசம் அருகே விவசாயிகள் சங்க தலைவரை தாக்கிய பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மாலாபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது46). இவர் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவருக்கும் மாலாபுரம் மேலத்தெருவை சேர்ந்த பா.ஜனதா ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி (46) என்பவருக்கும் இடையே வயல் பிரச்சினை இருந்து வந்தது. நேற்று காலை கண்ணன் பெருமாங்குடியில் உள்ள தனது வயலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, கண்ணனை வழிமறித்து அவரது தலையில் கம்பியால் தாக்கினார். இதில் கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த கண்ணன் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் கண்ணன் தன்னை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாபநாசம் மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ராஜசேகர், கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி தன்னை கண்ணன் தாக்கியதாக கூறி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்தும் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட கண்ணன் மீதும் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.