முட்டை ஓட்டின் தரம் உயர கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 கூடுதலாக தரவேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

முட்டை ஓட்டின் தரம் உயர கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 கூடுதலாக தர வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-01-11 21:45 GMT

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இன்று முதல் 3 நாட்களுக்கு காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்திலும், 15-ந் தேதி 8 கி.மீ. வேகத்திலும் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 62.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் தெளிவான வானத்துடன் வெப்ப அளவுகள் தொடர்ந்து குறைவாகவே நிலவும். இருப்பினும் பகல் வெப்ப அளவு கடந்த வாரத்தை விட உயர்ந்து காணப்படும். இன்னும் இரு வாரங்களுக்கு பகல் வெளிச்ச காலம் குறைந்து காணப்படும் என்பதால், கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 கூடுதலாக தர வேண்டும். இதனால், அதிக எடை கொண்ட முட்டை ஓட்டின் தரம் உயரும். உடைவுகள் குறையும். மேலும் கோழிகளின் காலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் குறையும்.

குளிர் காலம் என்பதாலும், நோய் பரவுவதற்கு ஏதுவான காலம் என்பதாலும், புதிய வரவு கறவை மாடுகளை உடனுக்குடன் மற்ற மாடுகளுடன் ஒன்றாக கலக்காமல், இரு வாரங்களுக்கு தனிக்கொட்டகையில் கட்டி வைத்து கவனித்து வந்து, பின்னர் ஒன்றாக கட்டவோ, மேய்க்கவோ செய்யலாம்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது.

எனவே கோழிப்பண்ணையாளர்கள் கோழித்தீவனத்தில் கிளாஸ்டிரியம், ஈகோலை மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் கிருமியின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்