மும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம்: 350 ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டம் பாய்ந்தது

மும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம் நீடித்தது. இதனால் பயணிகள் பரிதவித்து வருவதால், பஸ் ஊழியர்கள் 350 பேர் மீது ‘மெஸ்மா’ சட்டத்தின் கீழ் பணி நீக்க நடவடிக்கையை அரசு எடுத்து உள்ளது.

Update: 2019-01-09 23:23 GMT
மும்பை, 

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் சார்பில் 27 டெப்போக்களில் இருந்து 3,300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வேலை நிறுத்தம்

தானே, நவிமும்பை நகரங்களுக்கும் பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரெயில்களுக்கு அடுத்தபடியாக இந்த பஸ் சேவைகளை சுமார் 25 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெஸ்ட் குழுமத்தில் ஏறத்தாழ 33 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நிதிநெருக்கடியால் பெஸ்ட் குழுமம் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை கூட சரியாக வழங்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில், பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் பஸ் ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

பஸ் போக்குவரத்து முடங்கியது

இதன் காரணமாக மும்பையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அன்று பெஸ்ட் பஸ்களை நம்பியிருந்த பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் மெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பெஸ்ட் குழுமம் எச்சரித்தது.

ஆனால் ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பெஸ்ட் நிர்வாகம் பெஸ்ட் ஊழியர் யூனியன் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் காம்கார் சேனா யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிக்கு திரும்பினார்கள். ஆனால் அதிக உறுப்பினர்களை கொண்ட சசாங்க் ராவ் தலைமையிலான யூனியனை சேர்ந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதிரடி நடவடிக்கை

2-வது நாளாக நீடித்த பஸ் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதையடுத்து மராட்டிய அரசு 350 பெஸ்ட் பஸ் ஊழியர்கள் மீது மாநில அத்தியாவசிய சேவைகள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் (மெஸ்மா) கீழ் பணி நீக்க நடவடிக்கையை அதிரடியாக எடுத்தது.

இந்த தகவலை தெரிவித்த தொழிலாளர் யூனியன் தலைவர் சசாங்க் ராவ், ஊழியர்கள் மீதான துன்புறுத்தலை அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்