2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5 இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-01-09 23:12 GMT
விழுப்புரம், 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டம் நேற்றும் 2-வது நாளாக நீடித்தது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் மத்திய அரசு ஊழியர்கள் 5 ஆயிரம் பேர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள், தொலை தொடர்பு அலுவலகங்கள், வங்கிகள், எல்.ஐ.சி. அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில அலுவலகங்கள் பூட்டிக்கிடந்தன.

தபால் நிலைய சேவைகள் 2 நாட்கள் முற்றிலும் முடங்கியது. இதனால் தபால் நிலையங்கள் மற்றும் ஆர்.எம்.எஸ். அலுவலகங்களில் லட்சக்கணக்கான தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது. அதுபோல் வங்கிகளிலும் கடந்த 2 நாட்களாக ரூ.300 கோடிக்கு காசோலை பரிமாற்றமும், ரூ.200 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர், ஏழுமலை, வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலிசிகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், நீண்ட காலமாக வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அனவரதன், ராஜன்பாபு, பாலசுப்பிரமணியம், குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையிலும், முண்டியம்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையிலும், செஞ்சியில் தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் மயில்வாகனம் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பழனிவேல் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் நிர்வாகிகள் ஜெயக்குமார், முத்துராமலிங்கம் ரகுநாத், ஸ்ரீதர், நாராயணன், சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்