நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை பிரதமர் மோடி பெருமிதம்

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2019-01-09 23:04 GMT
சோலாப்பூர்,

மரத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மனாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் ரூ.1811 கோடி மதிப்பில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் எனது அரசு மசோதா தாக்கல் செய்து சுமுகமாக நிறைவேற்றி இருப்பது அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வரலாற்றில் ஒரு சாதனை சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் பொய்யை மட்டுமே பரப்புபவர்களுக்கு, இது சரியான பதிலடியாகவும் அமைந்துள்ளது. இந்த மசோதாவால் தலித்துகளோ அல்லது பழங்குடியின மக்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

பாதிப்பு இருக்காது

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை மசோதா பற்றி மோடி கூறும்போது, ‘‘வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை மக்கள் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட காலம் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அதேநேரம் காலம்காலமாக இங்கு பூர்வீகமாக வசிக்கும் மக்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது’’ என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்து காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.

ஊடகங்களில் வெளியான தகவல்களை சுட்டிக் காண்பித்து அவர் கூறும்போது, ‘‘அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் கைதாகி உள்ள கிறிஸ்டியன் மைக்கேல், பிரான்சில் ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகவும் வேறொரு போட்டி நிறுவனத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து உள்ளார். ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறி கூச்சலிடும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தன்னை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்கவேண்டும். கிறிஸ்டியன் மைக்கேல் ஏன் ரபேல் அல்லாத வேறு போட்டியாளருக்கு ஆதரவாக பேசினார் என்பதையும் காங்கிரசார் விளக்கவேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

பா.ஜனதா வெற்றி பெறும்

இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். நாட்டின் பாதுகாவலன் என்கிற முறையில் நாட்டில் இருந்து ஊழலை அடியோடு ஒழிப்பேன். அதற்கான எனது அரசின் நடவடிக்கை தீவிரமாக இருக்கும். யாராவது இரவில் தவறு செய்தால் கூட இந்த பாதுகாவலன் அவர்களை பிடித்து விடுவான் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி மராட்டியத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் மரத்வாடா பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், மோடியின் விழாக்களில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாடம் கற்பிப்பார்கள்

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நாடாளுமன்றத்தில் நடந்த ரபேல் விவாதத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டார். ஆனாலும் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரியான அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கின்றன. இது பெண்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. எதிர்காலத்தில் மக்கள் இந்த கட்சிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்’’ என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் செய்திகள்