ரபேலை போல பயிர்க்காப்பீடு திட்டத்திலும் பெரும் ஊழல் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

ரபேலை போல மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டத்திலும் பெரும் ஊழல் நடந்திருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

Update: 2019-01-09 22:57 GMT
பீட்,

மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவையும், பா.ஜனதா அரசையும் சிவசேனா தொடர் விமர்சனம் செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் கூறி வருகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பீட் மாவட்டத்தில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

ஊழல்

மத்திய அரசு கொண்டு வந்த பயிர்க்காப்பீடு திட்டத்துக்காக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்கு தவணை செலுத்தப்படுகிறது. ஆனால் அதன் பலனை எத்தனை விவசாயிகள் பெற்றார்கள்?. ரூ.2, ரூ.5, ரூ.50, ரூ.100 என விவசாயிகள் காப்பீடு காசோலையை பெறுகின்றனர். சாய்நாத் என்பவர், பயிர்க்காப்பீடு விஷயத்தில் நிபுணர். ரபேல் போர் விமான ஊழல் போல பயிர்க்காப்பீடு திட்டமும் ஊழல் மிகுந்தது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

மோடியின் வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளின் வயிறு நிரம்பாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கும் முன்பு விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். நீங்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறீர்கள். இந்தியாவில் மாற்றம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். உங்களுக்காக வேண்டுமானால் இந்தியாவில் மாற்றம் ஏற்படலாம். அது மக்களுக்காக அல்ல. அவர்களின் கவலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கோர்ட்டு முடிவு எடுக்கும் என்றால், கோவில் கட்டுவதாக தேர்தல் அறிக்கையில் எதற்கு வாக்குறுதி அளித்தீர்கள்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

மேலும் செய்திகள்