‘சொந்த பகையை தீர்த்து கொள்ளவே அலோக்நாத்துக்கு எதிராக கற்பழிப்பு புகார்’ வின்டா நந்தா மீது கோர்ட்டு குற்றச்சாட்டு

சொந்த பகையை தீர்த்து கொள்ளவே அலோக்நாத் மீது வின்டா நந்தா கற்பழிப்பு புகார் அளித்து இருப்பதாக கோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2019-01-09 22:55 GMT
மும்பை,

‘‘மீடூ’’ இயக்கத்தை தொடர்ந்து, இந்தி நடிகர் அலோக் நாத் மீது, திரைக்கதை ஆசிரியரான வின்டா நந்தா கடந்த அண்டு அக்டோபர் மாதம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். 1998-ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து அலோக் நாத்தால் தான் கற்பழிக்கப்பட்டதாக அவர் மும்பை ஓசிவாரா போலீசில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் 62 வயது நடிகரான அலோக் நாத் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அலோக் நாத்துக்கு கடந்த வாரம் முன்ஜாமீன் வழங்கி மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.ஓசா உத்தரவிட்டார். முன்ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொய் புகார்

நடிகர் அலோக் நாத் மீது பல ஆண்டுகளுக்கு பிறகு பாலியல் புகார் கூறியிருப்பதற்கான காரணத்தை வின்டா நந்தா தெரிவித்து இருக்கிறார். சம்பவத்தையடுத்து அவர், நண்பர்களிடம் ஆலோசித்ததாகவும், ஆனால் அலோக் நாத் பெரிய நடிகர் என்பதால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவர்கள் கூறியதால் அப்போது புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் வருடத்தை குறிப்பிட்டு உள்ளார். ஆனால் சம்பவம் நடந்த மாதம் மற்றும் தேதி தனக்கு நினைவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது, அவர் பொய்புகார் அளித்து இருக்கிறார் என்பதை மறுத்து விட முடியாது.

சொந்த பகையை தீர்த்து கொள்ள...

வின்டா நந்தாவும், அலோக் நாத்தின் மனைவி அசுவும் சண்டிகாரில் கல்லூரி தோழிகள். அவர்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது, அலோக்நாத்தை சந்தித்து உள்ளனர். அது முதல் 3 பேரும் நண்பர்களாகி உள்ளனர். இந்த நிலையில் அசுவை அலோக்நாத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் சிறந்த நண்பரை இழந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வின்டா நந்தா கருதி இருப்பதாக தெரிகிறது. அலோக் நாத் மீது தகுதியற்ற மற்றும் மறக்க முடியாத அன்பின் காரணமாக இப்படியொரு கற்பழிப்பு புகாரை அளிக்க அவர் தூண்டப்பட்டு இருக்கலாம். எனவே அவர் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சொந்த பகையை தீர்த்து கொள்ள அலோக்நாத் மீது கற்பழிப்பு புகார் அளித்து இருப்பதாக கோர்ட்டு கருதுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்