குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
சேத்தியாத்தோப்பு அருகே குளத்தில் மூழ்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் நாராயணன் (வயது 39), விவசாயி. இவரது மனைவி சித்ரா. நாராயணன் நேற்று முன்தினம் அதே பகுதியில் சென்னை-கும்பகோணம் சாலையில் உள்ள குளக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் குளத்தின் கரையோரம் நின்று கால் கழுவிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
உடனே அவர்கள் குளத்துக்குள் இறங்கி நாராயணனை தேடினர். சிறிது நேரத்திற்கு பின்னர், அவரை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாராயணன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.