பண்ருட்டி அருகே, முந்திரிதோப்பில் சாராயம் விற்ற 3 வாலிபர்கள் கைது

பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் சாராயம் விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-09 22:50 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் போலீசாருக்கு கீழ்மாம்பட்டில் உள்ள முந்திரி தோப்பில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்றனர். முந்திரிதோப்புக்குள் போலீஸ் வருவதை பார்த்தவுடன், அங்கிருந்து சிலர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்றதில் 3 பேர் மட்டும் சிக்கினர். அவர்களில் ஒருவர் கீழ்மாம்பட்டு முடப்பள்ளி தெருவை சேர்ந்த தங்கமணி(வயது 35), மற்றவர்கள் வனத்தையன் என்கிற ராஜா(28), ராஜேந்திரன்(34) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரிக்கையில், அந்த பகுதியில் டிராக்டருக்கு பயன்படுத்தப்படும் 3 டியூப்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் தப்பி ஓடிய முடப்பள்ளி தெருவை சேர்ந்த சிவக்குமார், ஜெயராமன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இவர்களில் சிவக்குமார் அ.தி.மு.க. பிரமுகர் என்பதுடன், கீழ்மாம்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்