திருப்பத்தூரில் குடியிருப்புகளில் தேங்கும் காவிரி குடிநீர்

திருப்பத்தூரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் காவிரி தண்ணீர், குடியிருப்புகளில் தேங்கி நிற்கிறது.

Update: 2019-01-09 22:33 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி முத்தரசன் நல்லூரில் இருந்து குழாய் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதுப்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அங்கிருந்து சிவகங்கை ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம் குடிநீர் ஏற்றப்படுகிறது.

இந்த குழாய் பதித்துள்ள பகுதிகளான மருதுபாண்டியர் நகர், கணேஷ்நகர், தங்கமணி தியேட்டர் ரோடு, அச்சுக்கட்டு பகுதி, நியூ கே.கே.நகர், சாம்பான்வடகரை, வீரபத்திரநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு காவிரி தண்ணீர் வீணாகி வருகிறது. அவ்வாறு வீணாகும் குடிநீர் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. ஒருசில இடங்களில் குடிநீர் வீணாகி ரோட்டில் செல்வதால், தார்ச்சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. குறிப்பாக நியூ கே.கே.நகர் பகுதியில் தண்ணீர் குடியிருப்பு பகுதியில் பாய்ந்து சாக்கடையாக மாறி நோய் பரப்பும் நிலை உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் குடியிருப்புகளில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்