2-வது நாள் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை: கர்நாடகத்தில் 50 பஸ்கள் மீது கல்வீச்சு பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
பெங்களூரு,
அதன்படி புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
அதுபோல் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முதல் நாளில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோக்கள் ஓரளவுக்கு ஓடின. ஆயினும் ெபாதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. முதல் நாளில் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
பஸ்கள் மீது கல்வீச்சு
இந்த நிலையில் 2-வது நாள் முழு அடைப்பு கர்நாடகத்தில் நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் காலையில் பெரும்பாலான பி.எம்.டி.சி. பஸ்கள் சேவையில் இறங்கின. இதனால் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
கும்பளமேடு, மாரத்தஹள்ளி, சிக்கஜாலா, எஸ்டீம்மால், மூடலபாளையா, நெலமங்களா, மாசோஹள்ளி, ஆடுகோடி, வில்சன்கார்டன், மாதநாயக்கனஹள்ளி, தாவரகெரே, மடிவாளா, அத்திப்பள்ளி, அடகமரனஹள்ளி, பேட்ராயனபுரா, ஜாலஹள்ளி மேம்பாலம், கடப்பகெரே கிராஸ் உள்ளிட்ட இடங்களில் இந்த கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 20 பஸ்களின் கண்ணாடி சேதம் அடைந்தன. இதில் சில கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களும் அடங்கும்.
3 டிரைவர்கள் காயம்
இதில் 3 டிரைவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்தனர். அவர்கள் பஸ்சை விட்டு இறங்கி வேறு பஸ்களில் சென்றனர்.
2-வது நாள் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து பி.எம்.டி.சி. பஸ்களின் சேவை உடனே நிறுத்தப்பட்டுவிட்டன. வெளியே சென்ற பஸ்கள் மீண்டும் பணிமனைக்கு வந்தன. இதனால் பயணிகள், பஸ்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். 2 நாட்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் வாகனங்கள்
இதனால் நகரில் உள்ள சாலைகளில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓட்டத்தை காண முடியவில்லை. ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் வாகனங்கள் வழக்கம்போல் ஓடின. ெமட்ரோ ரெயில்களின் போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை.
கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி இருந்தன. அதுபோல் காய்கறி மார்க்கெட்டுகள் செயல்பட்டன. அங்கு மக்களின் நடமாட்டமும், வியாபாரமும் வழக்கம்போல் இருந்தன.
கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
நேற்று பெங்களூருவில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகள் திறந்திருந்தன. அதே நேரத்தில் சில தனியார் கல்வி நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்திருந்தன.
தொழிற்சங்க நிர்வாகிகள் டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டு சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சுதந்திர பூங்காவுக்கு திருப்பி விட்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
போலீஸ் பாதுகாப்பு
அசம்பாவித சம்பவங்களை தடுக்க நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரின் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாைல 4 மணிக்கு மேல் மாநகர பஸ்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்தன. அங்கிருந்து பஸ்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றன. மாலை 6 மணிக்குள் அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் பிறகு சகஜ நிலை திரும்பியது.
தீவைத்து எரித்தனர்
தாவணகெரேயில் போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படுத்தினர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவபடத்தை தீவைத்து எரித்தனர்.
அதே ேபால் கலபுரகி, உப்பள்ளி, பாகல்கோட்டை, கார்வார், சிக்கோடி, உடுப்பி, விஜயாப்புரா ஆகிய இடங்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். கலபுரகி, பல்லாரியில் போராட்டம் நடத்தியவா்கள் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவா்களை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.
பஸ்கள் சேவை பாதிப்பு
பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் சேைவ நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
2 நாட்கள் முழு அடைப்பு போராட்டம், கர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் முழு அடைப்பு நடந்த 2 நாட்களிலும் பஸ் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பு
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.