கரும்பு நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் பாம்பு, எலி கறி சாப்பிடும் போராட்டம்

கரும்பு நிலுவை தொகையை கேட்டு பாம்பு மற்றும் எலி கறி சாப்பிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-09 22:45 GMT
விருத்தாசலம், 

கரும்பு நிலுவை தொகையை வழங்காத சித்தூர் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்தும், கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகை மற்றும் மாநில அரசின் ஆதரவு தொகையை உடனடியாக அரசு பெற்று தர வேண்டும், மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குதல், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 7-ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று முன்தினம் இவர்கள், காதில் பூ வைத்து, பட்டை நாமம் போட்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாளை (அதாவது நேற்று) பாம்பு கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் யாரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி அவர்கள் பாம்பு கறியை சாப்பிடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதற்கு முன்னோடி விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு பாம்பு மற்றும் எலி கறியை பச்சையாக சாப்பிடும் விதமாக, அவற்றை தங்களது வாயில் கடித்து வைத்திருந்த படி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் விருத்தாசலம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வக்கீல்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், மணிகண்டராஜன், காசி விசுவநாதன், சிவசங்கரன், சந்திரசேகரன், புஷ்பதேவன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் விவசாயிகளை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல இந்திய குடியரசு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சீர்மரபினர் நல சங்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகத்துக்கே உணவிடும் விவசாயிகள் கரும்பு நிலுவை தொகை கேட்டு பல ஆண்டுகளாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எலி, பாம்பை சாப்பிடுவதற்கான ஒரு சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தி விட்டது. அடுத்தக்கட்டமாக விவசாயிக்கு பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்துவோம்.

விவசாயிகள் தாங்கள் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல், அவதிப்பட்டு வருகிறார்கள். கரும்புக்கான பணத்தை கொடுப்பது சர்க்கரை ஆலையின் வேலை. அந்த ஆலை கொடுக்காவிட்டால் அந்த பணத்தை வாங்கி கொடுப்பது மாவட்ட நிர்வாகம், இந்த மாநிலத்தை ஆளுகின்ற முதல்-அமைச்சர் ஆகியோரின் வேலை. இவர்கள் வாங்கி தர மறுப்பதால் தான், எங்களை ஆலை நிர்வாகத்தினர் ஏமாற்றி வருகிறார்கள்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கான கரும்பு நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் நடத்தி வரும் இந்த தொடர் போராட்டங்களால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்