அழகு நிலையத்தில் வங்கி மேலாளர் மனைவியின் தங்க சங்கிலி திருட்டு

தேனி அருகே அழகு நிலையத்தில் வங்கி மேலாளர் மனைவியின் தங்க சங்கிலி திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-09 23:00 GMT
தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவர், தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி அகிலா (வயது 22). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி (36). இவர், தனது வீட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

கடந்த 3-ந்தேதி இந்த அழகு நிலையத்துக்கு அகிலா சென்றார். அங்கு அவர் முகப்பொலிவு செய்தார். அப்போது அவர், தனது 5 பவுன் தங்க சங்கிலியை அங்கு கழற்றி வைத்தார். முகப்பொலிவு செய்த பிறகு பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அகிலா புகார் செய்தார். அதன்பேரில் செல்வக்குமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்க சங்கிலியை அவர் தான் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரியை கைது செய்தார். அவரிடம் இருந்து 5 பவுன் தங்கசங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்