பழனி முருகன் கோவிலில் பட்டு வேட்டி, சேலை அணிந்து அமெரிக்க பக்தர்கள் சாமி தரிசனம்

அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் பட்டுவேட்டி, பட்டுச்சேலை அணிந்து வந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-01-09 23:30 GMT
பழனி,

அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் வசிப்பவர் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவம் பற்றி மாணவ-மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார். தமிழ் மொழி மீது பற்று கொண்டு தனது பெயரை சுந்தரமூர்த்தி என மாற்றிக்கொண்டார்.

அமெரிக்காவில் இவரை போல் தமிழ் மீது பற்று கொண்ட மாணவ-மாணவிகள் தற்போது அதிகரித்துள்ளனர். இவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமான அமெரிக்கர்கள் பின்பற்றி தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலரை மட்டும் ஆண்டுதோறும் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்வதற்காக இவர் அழைத்து வருவார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு டக்ளஸ் புரூக்ஸ் தலைமையில் அமெரிக்க பக்தர்கள் 18 பேர் சென்னைக்கு வந்தனர். அங்கிருந்து சென்னையை சேர்ந்த ஜெகன்நாத்பாபு என்பவர் வழிகாட்டியாகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு அமெரிக்க பக்தர்களை பழனி கோவிலுக்கு நேற்று அழைத்து வந்தார். அப்போது அவர்களில் ஆண்கள் பட்டுவேட்டியும், பெண்கள் பட்டுச்சேலையும் அணிந்து வந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டனர்.

பின்னர் முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரத்தை பார்த்து அமெரிக்க பக்தர்கள் பக்தி பரவசத்தில் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என கோஷம் எழுப்பினர். வெளிநாட்டினர் தமிழ் மொழியில் உற்சாகத்துடன் சரண கோஷம் எழுப்பியது சுற்றியிருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

முன்னதாக மலைக்கோவிலுக்கு வந்த அமெரிக்க பெண் பக்தை பேர்கிளாத் என்ற சாரா மயில்காவடி எடுத்து பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்திய அமெரிக்க பக்தர்கள் தமிழக பக்தர்களை போல் நெற்றியில் திருநீர் பூசி, குங்குமம், சந்தனத்தை பக்தி பரவசத்துடன் வைத்துக்கொண்டனர். அவர்கள் 10-வது ஆண்டாக பழனி கோவிலுக்கு வந்து இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து மின் இழுவை ரெயில் மூலம் அடிவாரத்துக்கு வந்த அவர்கள், காரில் புறப்பட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்றனர்.

மேலும் செய்திகள்