சிறிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பரிந்துரை ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

சிறிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரெயில்வே துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என புதிய செயலி தொடக்க விழாவில் ரெயில்வே ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Update: 2019-01-09 22:15 GMT
திருவண்ணாமலை,


ரெயில்களில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும், ரெயில் பயணிகளுக்கு உதவும் வகையிலும் ஜி.ஆர்.பி. என்ற பாதுகாப்பு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இந்த செயலியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு செயலியை அறிமுகப்படுத்தி பேசினார்.

விழாவில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்திரின் சுஜாதா மற்றும் போலீசார், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ரெயில்வே போலீசாருக்கு வந்த அனைத்து புகார்களும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது பயணத்தின்போது தேவையான உதவிகள் பெறவும், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல்கள் அளிக்கவும், குற்றவாளிகளை கண்டால் அது குறித்து உடனடியாக தகவல்களை அளிக்கும் வகையில் ஜி.ஆர்.பி. என்ற பாதுகாப்பு செயலி மாணவ, மாணவிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


எந்த ரெயிலில் பயணம் செய்தாலும் இந்த செயலி மூலம் ரெயில்வே போலீசாருக்கு புகார் செய்தால் உடனடியாக உதவிக்கு போலீசார் வருவார்கள். திருவண்ணாமலைக்கு வந்த ரெயிலில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் நாங்கள் தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்து உள்ளோம்.

தற்போது பெரிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க ரெயில்வே துறையினருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்