நெல்லை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக சாலை மறியல்
நெல்லை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 821 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பை,
அகில இந்திய அளவில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்தம் நடந்தது.
அம்பையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடந்தது. பூக்கடை பஜார் அருகே நடந்த மறியலுக்கு தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த மைக்கேல், நெடுஞ்செழியன், ஐ.என்.டி.யு.சி. ஆதிமூலம், பாலு, சி.ஐ.டி.யு. வண்ணமுத்து, ஜே.ஐ.டி.யு.சி. முருகன், ராமகிருஷ்ணன், எச்.எம்.எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 141 பேரை அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், இன்ஸ்பெக்டர் பிரதாபன் ஆகியோர் கைது செய்தனர்.
தென்காசி பழைய பஸ் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர்கள் சாமி, முத்துப்பாண்டி, ஒன்றிய தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அருணாசலம், சி.ஐ.டி.யு. வேல்முருகன், விவசாய சங்கம் சார்பில் முத்துப்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கணபதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 214 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட 36 பேரை ஆய்க்குடி போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில குழு உறுப்பினர் பெருமாள், நிர்வாகிகள் உச்சிமகாளி, அசோக்ராஜ், லட்சுமிதாய், தொ.மு.ச. நெல்சன் மற்றும் 15 பெண்கள் உள்பட 128 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் கைது செய்தார்.
சங்கரன்கோவில் தேரடி திடல் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி தலைமையில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் பழைய பஸ்நிலையம் அருகே விவசாயிகள் சங்க தலைவர் பெரும்படையார் தலைமையில், சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பிய 113 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.
வீரவநல்லூரில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் பழனிசாமி தலைமையில் பல்வேறு அமைப்பினர் மெயின்ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் கலந்து கொண்ட 109 பேரை வீரவநல்லூர் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பல்வேறு இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிற்சங்கத்தினர் போராட்டம் காரணமாக செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு பஸ்கள் நேற்றும் இயக்கப்படவில்லை. செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட பஸ்களும், அதேபோல் கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு வரும் 25-க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கம்போல் கேரளாவிற்கு அய்யப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் சென்றன. பஸ்கள் இயக்கப்படாததால் செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு செல்லும் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.