ஆன்லைன் மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கும் சேவை போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-09 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கி சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சேவையை பயன்படுத்த தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.500-ம், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.1000-ம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை இணையதளம் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். இதற்காக மக்கள் போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சரிபார்ப்பு அறிக்கையையும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் பதிவு செய்யலாம். இந்த பதிவுகள் நேரடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்றடையும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு லிங்கதிருமாறன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

தனிநபர் விவரம் சரிபார்ப்பு சான்று பெறுவதற்காக தினமும் 50 பேர் வரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இந்த சேவை பயன் உள்ளதாக இருக்கும். இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த கலவரத்தின் போது கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன. இந்த கேமராக்கள் தற்போது சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து கேமராக்களும் சரி செய்யப்படும். பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பிரச்சினைக்கு உரிய இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்